புவிசார் குறியீடு பெற்றது பழனி பஞ்சாமிர்தம்

1 mins read
43e8594c-7d79-4dd7-bbcd-2f86a69d4a60
பழநி பஞ்சாமிருதம், கோப்புப்படம் -

பழனி: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து அனைத்துலக அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் எனும் பெருமை இதற்குக் கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் அல்லது விளைவிக்கப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அதேசமயம் அப்பொருட்கள் மகத்துவமும் தனித்துவமும் பெற்றிருக்க வேண்டும் என்பதும் விதிமுறை.

இந்தியாவைப் பொறுத்தவரை. புவிசார் குறியீட்டு பொருட்கள் சட்டமானது கடந்த 2003இல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, அவற்றை தனித்து அடையாளம் காண்பதற்கான இடம் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் அப்பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பழனி பஞ்சாமிர்தம் இந்தப் பட்டியலில் 29ஆவது பொருளாக இணைந்துள்ளது.

அடிப்படையில், மலை வாழைப்பழம், நாட்டுச் சீனி, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சுவையைக் கூட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது.

தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பஞ்சாமிர்தம் ஒரு சொட்டு தண்ணீர் பட்டால்கூட கெட்டு போய்விடும்.