துடுப்புப் படகு விபத்து: பெண்ணின் சடலம் திரெங்கானுவில் மீட்பு

மலேசியாவில் திரெங்கானு அருகே உயிர் காப்பு உடை அணிந்திருந்த ஒரு மாதின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை மலேசிய அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர். ஆனால் அந்த உடல் யாருடையது என்பதை அவர்கள் அடையாளம் காணவில்லை.

அந்த உடல், மெர்சிங்கின் எண்டாவ் கடற்பகுதியில் காணாமல்போன இரண்டு சிங்கப்பூர் துடுப்பு (கயாக்) படகோட்டிகளில் ஒருவரான திருவாட்டி புவா ஜியோக் டின், 57, என்பவருடையதா என்று உறுதிப்படுத்த அதிகாரிகள் அந்த மாதின் உறவினர்களை அணுகி இருக்கிறார்கள்.

திரெங்கானு நீர்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 12.55 மணிக்கு மீனவர் ஒருவர் அந்த உடலைக் கண்டதாகவும் அது பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.

உடலை மீட்ட அதிகாரிகள், சிங்கப்பூர் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

மெர்சிங்கில் உறவினர்கள் முன்னதாக திரண்டிருந்தனர். இதற்கு முன்னதாக வேறு ஒரு மீனவர் பச்சைநிற துடுப்புப் படகு ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்.

அந்தப் படகு திருவாட்டி புவாவிற்கும் காணாமல் போன திரு டான் எங் சூன், 62, என்ற சிங்கப்பூரருக்கும் சொந்தமானது. 

அந்த இருவரையும் ஆகஸ்ட் 8 முதல் காணவில்லை. படகு குவாந்தான் கடற்பகுதியில் காணப்பட்டது. அந்தப் பகுதி ஜோகூர் மெர்சிங்கில் இருந்து 200 கி.மீ.க்கும் அதிக தொலைவில் இருக்கிறது. தேசிய தின விடுமுறையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 15 பேர் மெர்சிங் பகுதியில் துடுப்புப் படகுகளில் சென்றனர். அந்த 15 பேரில் திருவாட்டி புவா, திரு டான் ஆகிய இருவரும் காணாமல் போய்விட்டார்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட அவர்களுடைய படகில் அந்த இருவரின் உடைமைகள் நீர் புகாத பையில் அப்படியே இருந்தன. அவை காணாமல் போன சிங்கப்பூரர்களுக்குச் சொந்தமானதா என்பதைக் கண்டறிய நேற்று இருவரின் உறவினர்களும் சென்றிருந்தனர். 

மலேசிய அதிகாரிகள் நேற்று நண்பகலில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் நான்கு ஹெலிகாப்டர்கள், ஒரு விமானம், மூன்று கப்பல்கள், ஏழு படகுகள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்கள்.

கடலில் தேடப்பட்டு வரும் வட்டாரத்தின் பரப்பளவு 1,200 கடல் மைல்களாக விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது என்றும் பென்யாபோங் படகுத் துறையில் அமைக்கப்பட்டு இருக்கும் மெர்சிங் தேடி மீட்பு நிலையத்தில் இருந்த அதிகாரிகள் கூறினர். நிலப் பகுதியிலும் தேடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறவினர்கள் அந்தப் படகுத்துறையில் காத்திருந்தனர்.