தலைநகரை இடம்மாற்ற நாடாளுமன்றத்திடம் ஆதரவு கோரும் ஜோக்கோவி

இந்தோனீசியா வேகமாக வளர்ச்சி அடைந்து, அனைத்துலக அரங்கில் போட்டித்தன்மையுடன் விளங்குவதை உறுதி செய்திட, இந்தோனீசிய அரசாங்கத்தின் நிர்வாகத்துறை, சட்டமைப்புத்துறை, நீதித்துறை அனைத்தும் இணைந்து செயல்படவேண்டும் என்று அதிபர் ஜோக்கோ விடோடோ வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) கேட்டுக்கொண்டார். 

சனிக்கிழமை இந்தோனீசியாவின் சுதந்திர தினம். அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை காலை இரண்டு உரைகள் ஆற்றிய திரு ஜோக்கோ, இந்தோனீசியத் தலைநகரை கலிமந்தானுக்கு இடம்மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திடம் அதிகாரபூர்வமாக ஆதரவு கோரினார். 

அரசாங்கம், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையிலான கண்காணிப்பும் சமநிலையும் மிகவும் என்றாலும், அனைத்துப் பிரிவுகளும் ஒரே இறுதி இலக்கைக் கொண்டிருக்கவேண்டும் என்றார் அவர். இந்தோனீசியாவின் முன்னேற்றமே அந்த இறுதி இலக்கு என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இடையில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

வறுமையைத் துடைத்தொழித்து, சமத்துவமின்மையைக் குறைத்து, கூடுமானவரை நிறைய வேலைகளை உருவாக்குவதற்குச் சாதகமான சூழலை உருவாக்க, அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளும் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

தரமான மனிதவளத்தை உருவாக்குவதிலும், சகிப்புத்தன்மையின்மை, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய மிரட்டல்களைக் கையாளுவதிலும் அனைத்து தரப்பினரும் ஈடுபாடு கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

“நாம் வலுவாக இருக்கவேண்டுமாயின், இனியும் தனித்தனியே செயல்பட முடியாது.. அரசாங்கப் பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் ஒத்திசைவும் மேம்பட்டாகவேண்டும்,” என்றார் அவர். 
நாடாளுமன்றம் இவ்வாண்டு இது வரையில் 15 மசோதாக்களின் விவாதங்களைப் பூர்த்தி செய்திருப்பதைத் தமது முதல் உரையில் பாராட்டிப் பேசினார் திரு ஜோக்கோ.