இலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை

இலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை

2 mins read
162d4fda-374b-44b5-9d4c-d64e9b4ff6d3
பயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம் -

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்க மறுத்துள்ளார். கேரளாவின் கொச்சி நகரில் நேற்று முன்தினம் இலங்கை சுற்றுலா வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்களில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் கேரள மாநிலத்திற்கும் சென்றதாக அண்மையில் இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயகே தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கு வெளியில் உள்ள பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்கள் பயிற்சிக்காக அல்லது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா சென்றிருக்கலாம் என்ற சந்தேகக் கருத்தையும் ராணுவத் தளபதி வெளியிட்டிருந்தார்.

ஆனால் அமைச்சர் அமரதுங்க இந்தக் கருத்தை அடியோடு மறுத்தார்.

"தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு இந்தியாவோடு தொடர்பிருப்பதாகச் சொல்லப்

படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

"இலங்கையில் அதிக அளவிலான பயங்கரவாதிகள் இல்லை. இருப்பினும் ஒருசில பயிற்சி முகாம்கள் இலங்கையில் உள்ளன. அவற்றை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்.

"இந்தியாவிலும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இருப்பது பற்றி எனக்குத் தெரியாது," என்றார் அவர்.

தாக்குதல் காரணமாக ஏப்ரல் முதல் நலிவடைந்து வந்த சுற்றுலாத் துறை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புகொண்ட அத்தனை பேரையும் இலங்கை பாதுகாப்புப் படை கைது செய்துவிட்டது. எனவே இலங்கைக்கு சுற்றுலா வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்பு உறுதி.

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று விடுக்கப்பட்ட அறிவிப்பை உலகின் பல நாடுகளும் மீட்டுக்கொண்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.