மலேசியாவின் முன்னையப் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்புபடுத்தப்படும் 1எம்டிபி பண மோசடிக்கான விசாரணையை அந்நாட்டின் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.
கடந்தாண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த திரு நஜிப் மீது பண மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் ஆகியவற்றின் தொடர்பில் 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தன்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறிவரும் திரு நஜிப், அந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டுள்ளவை என்று தெரிவித்தார்.
1எம்டிபியுடன் முன்னதாக இணைந்திருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான வழக்கிற்குப் போதிய அவகாசம் வழங்குவதற்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டில் திரு நஜிப் நிறுவிய 1எம்டிபி நிறுவனம் தற்போது ஆறு நாடுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்நிதியத்திலிருந்து கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டாலர் கையாடப்பட்டதாக அமெரிக்காவின் நீதித்துறை தெரிவித்தது.

