ஹாங்காங்: தொடர்ந்து 11வது வாரஇறுதியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வர, நேற்று விக்டோரியா பார்க் பகுதியில் மக்கள் கூட்டம் குவிந்தது. சனிக்கிழமை போலவே நேற்றும் கனத்த மழை பெய்தபோதும் கலைந்துபோகாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
குடைகள், மழை அங்கிகள் ஆகியவற்றுடன் விக்டோரியா பார்க்கில் நிரம்பி வழிந்த மக்கள், வான் சாய் பகுதிக்கும் அரசு தலைமையகம் அமைந்துள்ள அட்மிரால்டி பகுதிக்கும் அணிவகுத்துச் சென்றனர்.
கிட்டத்தட்ட 100,000 பேரைக் கொள்ளும் இடவசதி விக்டோரியா பார்க்கில் உள்ளது. நகராமல் அங்கேயே ஒரு பேரணியை நடத்த அதன் ஏற்பாட்டுக் குழுவான 'சிவில் மனித உரிமைகள் ஃப்ரண்ட்' அமைப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், விக்டோரியா பார்க்கில் கூடிய மக்கள் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.
இந்நிலையில் அமைதி, அகிம்சை, விவேகம் ஆகியவற்றைக் கொண்டது இப்பேரணி என்று அமைப்பு விளக்கம் அளித்திருந்தது. நேற்று கறுப்பு உடை அணிந்தவாறு ஆர்ப்பாட்டப் படை, ஹாங்காங்கை விடுவிக்குமாறு கோஷமிட்டது. உடனே ஜனநாயகம் வேண்டும் என்று ஆங்கிலத்திலும் உரக்கக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அனைத்து 'எம்டிஆர்' ரயில் சேவைகளும் வழக்கநிலைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

