திருமண விருந்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 63 பேர் பலி, 182 பேர் படுகாயம்

திருமண விருந்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 63 பேர் பலி, 182 பேர் படுகாயம்

1 mins read
9ac10838-dc7b-41ba-99a5-cb025186b1c7
வெடிகுண்டுத் தாக்குதலில் திருமண மண்டபத்தின் சேதமடைந்திருந்த மணமேடைப் பகுதி. படம்: ராய்ட்டர்ஸ் -

காபூல்: திருமண விருந்து ஒன்றில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 182 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருமண நிகழ்வில் தாக்குதல் நடத்தியதற்கு 'ஐஎஸ்ஐஎஸ்' போராளிகள் பொறுப்பேற்று உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று வாஷிங்டனுக்கும் தலிபானுக்கும் இடையே இறுதிக் கட்டத்தில் இருந்து வர, இவ்வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனை அடுத்து தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய தலிபான், திருமண நிகழ்வில் தாக்குதல் நடத்தியோரையும் வெகுவாகச் சாடியிருந்தது.

காயமுற்றோரில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர் என்று கூறினார் உள்துறை அமைச்சுப் பேச்சாளர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று அதிபர் அஷ்ரஃப் கனி கூறினார்.

அத்துடன் பயங்கரவாதிகளுக்குத் தளம் அமைத்துத் தருவதால் தலிபானும் பழியிலிருந்து தப்ப முடியாது என்று அவர் டுவிட் செய்திருந்தார்.

தாக்குதல் நடந்த திருமண மண்டபத்தில் உடல்களுடன் மேசை, நாற்காலிகள் அலங்கோலமாகக் கிடந்தன. கம்பளங்களும் நாற்காலிகளும் ரத்தக் கறையாக இருந்ததைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. திருமணத் தம்பதி உயிர் தப்பியும் தங்களின் சொந்தங்களைத் தாக்குதலில் இழந்ததை எண்ணி இருவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று காபூலின் இடுகாடுகளில் இறந்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.