‘ஸாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தரவாசத் தகுதி மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்’

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாயக் மீது போலிஸ் தரப்பு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் மீது போதுமான அளவுக்கு குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. அவருடைய மலேசிய நிரந்தரவாசத் தகுதி மீட்டுக்கொள்ளப்பட்டு இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்படுவதே நல்லது என மலேசிய முன்னாள் போலிஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் கருத்து தெரிவித்துள்ளார்.

“கிளந்தானில் அவர் பேசிய இனவாத பேச்சும் இந்தியாவில் அவர் மீது ஏற்கெனவே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுமே போதுமானவை. எனவே ஸாகிர் நாடு கடத்தப்பட வேண்டும் என மலேசிய அரசாங்கத்தை  நான் வலியுறுத்துகிறேன், என திரு ரஹிம் கூறினார்.

டாக்டர் ஸாகிர் மீதான குற்றங்கள் நிரூபணமானால் அவருடைய நிரந்தரவாசத் தகுதி பற்றி முடிவெடுக்கப்படும் என மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அண்மையில் கூறியிருந்ததை திரு ரஹிம் சுட்டிக்காட்டினார். “என்னைப் பொறுத்தவரை டாக்டர் ஸாகிர், மலேசியாவின் சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேசிவிட்டார். குறிப்பாக, இந்துக்களைப் பற்றி அவர் தரக்குறைவாக கருத்துரைத்தார். எனவே போலிஸ் விசாரணையின் முடிவுகள் வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என திரு ரஹிம் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஏராளமான சமய போதகர்கள் இருந்தாலும், டாக்டர் ஸாகிரை மட்டும் அந்நாட்டு அரசாங்கம் தேடுவதற்கான காரணம் கண்டிப்பாக இருக்கும் என்றார் திரு ரஹிம்.

“அவர் தனது சொந்த நாட்டில் செய்த செயல் ஒன்று சட்டத்திற்கு எதிரானது. ஆகவே, அவர் இந்திய அதிகாரிகளால் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். வெளிநாட்டினர் இங்கு வந்து குழப்பத்தையும் சிக்கலையும் தூண்டுவதற்கு சமயத்தைப் பயன்படுத்துவதற்கான தேவை சிறிதளவும் இல்லை.

“நம் நாட்டில் இன, சமய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வெளிநாட்டினர் ஒருவர் நமக்குத் தேவையா? என்னைக் கேட்டால் அது நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்,” என்று திரு ரஹிம் ஆணித்தரமாகச் சொன்னார்.

இந்நிலையில், டாக்டர் ஸாகிர் மீதான எதிர்ப்பு வலுத்து போலிசிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று இரண்டாம் முறையாக அவர் போலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.