'பொது இடங்களில் ஸாகிர் நாயக் உரையாற்றக்கூடாது'

'பொது இடங்களில் ஸாகிர் நாயக் உரையாற்றக்கூடாது'

1 mins read
ffe6dac7-fe58-4ee7-9acf-d6f2735bb760
போதகர் ஸாகிர் நாயக் -

பெட்டாலிங் ஜெயா: சர்ச்சைக்குரிய போதகர் ஸாகிர் நாயக் (படம்) பொது இடங்களில் உரையாற்றுவதற்கு மலேசியப் போலிஸ் தடைவிதித்துள்ளது.

மலேசிய போலிஸ் துறையின் தொடர்புத்துறைத் தலைவர் மூத்த துணை ஆணையாளர் அஸ்மாவதி அஹ்மது இதை உறுதி செய்தார். இந்தத் தகவல், மலேசியாவின் அனைத்து மாநிலங்களின் தலைமைக் காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி கசிந்தது. அதனை அந்த அதிகாரி உறுதி செய்தார். நாட்டின் பாதுகாப்பையும் இன நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் நேற்று தெரிவித்தார்.

மத போதகர் ஸாகிர் நாயக்கின் இனரீதியிலான சர்ச்சைக்குரிய பேச்சால் அவருக்கு மலேசியாவின் மலாக்கா, ஜோகூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சரவாக் ஆகிய ஏழு மாநிலங்களில் பொது இடங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

குற்றவியல் விதி 504ன் படி ஸாகிர் நாயக்கிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் கோத்தா பாருவில் பொது இடத்தில் உரையாற்றும்போதும் மலேசிய சீனர்களையும் மலேசிய இந்துக்களையும் அவமதித்தார் என அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்திய அரசாங்கத்தால் 2016ஆம் ஆண்டு முதல் ஸாகிர் தேடப்பட்டு வருகிறார்.

இனக் கலவரத்தைத் தூண்டும் வகையில் வெறுப்புணர்வுப் பேச்சுகளைக் கட்டவிழ்த்து விட்டது, சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்தது ஆகிய குற்றங்களுக்காக இந்திய போலிஸ் அவரைத் தேடி வருகிறது.