பேங்காக்: லாவோஸில் சீன நாட்டுச் சுற்றுப்பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று மலை இடுக்குகளுக்குள் கவிழ்ந்து 13 பேர் மாண்டனர். நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து சுற்றுலாத் தலமான லுவாங் பிரபாங் என்னும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மலை சூழ்ந்த சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென சாலையில் இருந்து நழுவி 30 மீட்டர் ஆழத்தில் மலை இடுக்குகளில் விழுந்தது. பேருந்தின் நிறுத்துவிசை செயலிழந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களில் 13 பேரின் உடல் மீட்கப்பட்டதாகவும் இருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 31 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மியன்மார் ஆகிய நாடுகளில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது இயல்பு என்று கூறப்படுகிறது. ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் மழைக்காலம் என்பதால் லாவோஸில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள சாலைகளும் வழுக்கும் நிலையில் உள்ளன என்றுகூறப்படுகிறது. இங்கு வருகை தரும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

