சீன எல்லையில் காணாமல்போன பிரிட்டிஷ் தூதரக ஊழியர்

சீன எல்லையில் காணாமல்போன பிரிட்டிஷ் தூதரக ஊழியர்

2 mins read

ஹாங்காங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சீன எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் பிரிட்டன் கவலை அடைந்துள்ளது.

இதன் தொடர்பாக அது வெளியிட்ட அறிக்கையில் ஹாங்காங்கிலிருந்து சென்ற சைமன் செங் இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து காணாமல் போனதாக நம்பப்படுகிறது என்று தெரிவித்தது.

குவாங்டோங் மாநிலம், ஹாங்காங் ஆகியவற்றின் அதி காரிகளிடம் தொடர்புகொண்டு அவரைப் பற்றி விசாரித்து வருகிறோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப் பிட்டது.

இந்தச் சூழ்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம், ஊழியரின் குடும்பத்துக்கு உதவிகளை செய்து வருகிறது.

"ஷென்சென்னிலிருந்து ஹாங்காங்குக்குத் திரும்பிக் கொண்டிருந்த எங்களுடைய குழுவின் உறுப்பினர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டது கவலையைத் தருகிறது," என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் தூதரக ஊழியரான திரு செங் அங்கு வர்த்தக, முதலீட்டு அதிகாரியாகச் செயல்பட்டு வந்தார்.

இம்மாதம் 8ஆம் தேதி ஷென்சென்னில் நடைபெற்ற வர்ததக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் ஹாங்காங் திரும்பினார்.

ஆனால் சீன எல்லையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்ற அதே நாளில் அவர் ஹாங்காங் திரும்ப திட்டமிட்டிருந்தார் என்றும் அதன்படி அவர் திரும்பவில்லை என்றும் 'எச்கே01' செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில் அவரது காதலி கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதால் ஹாங்காங்-சீன எல்லையில் பாதுகாப்பு கெடுபிடி அதிகரித்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹாங்காங்கிலிருந்து எல்லை வழியாக சீனாவுக்குள் நுழைபவர்களை சீனாவின் போலிசார் கடுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர் என்று பயணிகள் கூறுகின்றனர்.