ஹாங்காங்கின் துணைத் தூதரக ஊழியர் ஒருவர் பெருநிலச் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டது குறித்து பிரிட்டன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷென்சன் நகருக்குச் சென்றிருந்த சைமன் செங் என்ற அந்த ஊழியர் வீடு திரும்பவில்லை என்று ஹாங்காங்கின் செய்தி இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது.
செங் மாயமானதை அவரது குடும்பத்தார் நேற்றிரவு ஃபேஸ்புக் வழியாக உறுதி செய்தனர்.
ஹாங்காங் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களால் அதிருப்தியிலுள்ள சீனா, தனது உள்நாட்டு விவகாரங்களில் பிரிட்டனும் மேற்கத்திய நாடுகளும் தலையிடுவதாகக் குற்றம் சாட்டுகிறது.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஒரு நாடு, இரண்டு நிர்வாகம் என்ற முறையை மதித்து நடக்குமாறு சீனாவிடம் கேட்டுக்கொண்டன. 1997ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் காலனியாக இருந்துவந்த ஹாங்காங், சீனாவிடம் இந்த 'இரண்டு நிர்வாக' நிபந்தனையின்படி ஒப்படைக்கப்பட்டது.
"சென்ஸென் நகரிலிருந்து ஹாங்காங்கிற்குத் திரும்பிக் கொண்டிருந்த எங்கள் குழு உறுப்பினர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டது குறித்து நாங்கள் மிகுந்த அக்கறையில் உள்ளோம்," என்று பிரிட்டனின் வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் அறிக்கை வெளியிட்டார். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
"நாங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவு அளித்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து நாங்கள் குவாங்டோங் மாநிலத்திலிருந்தும் ஹாங்காங்கிலிருந்தும் மேல் விவரங்களை நாடி வருகிறோம்," என்று அந்தப் பிரதிநிதி கூறினார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சு எதுவும் கூற மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

