மலேசியாவின் ஆகப் பழமையான மலாய் மொழி பத்திரிகையைப் பிரசுரிக்கும் 'உத்துசான்' குழுமம் தனது செயல்பாடுகளை நிறுத்தப்போவதில்லை என அறிவித்திருக்கிறது. 'உத்துசான்' பத்திரிகை மூடப்போவதாக முன்னாள் வெளிவந்த செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகையில் அந்நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.
உத்துசான் மலேசியா செய்தித்தாளின் விலை, 1.50 ரிங்கிட்டிலிருந்து 2 ரிங்கிட்டுக்கு உயர்த்தப்படும் என்று முன்னைய தலைவர் அப்துல் அஸிஸ் ஷெய்க் ஃபட்ஸிர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், உத்துசான் குழுமத்தின் கோஸ்மோ இதழின் விலை 1 ரிங்கிட்டிலிருந்து 1.50 ரிங்கிட்டுக்கு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"செய்தித்தாட்களின் விலையை அதிகரித்து, விளம்பர வருமானத்தை உயர்த்த நாம் தொடர்ந்து பாடுபடவேண்டும். அத்துடன், எங்களது செய்தி இணையத்தளத்திலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டி, மின்-பத்திரிகை சந்தாதாரர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவேண்டும். இவ்விரண்டு பத்திரிகைகளின் விலையை அதிகரிப்பதன் மூலம் மாதத்திற்கு 2.3 மில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்ட நாங்கள் முனைகிறோம். இதன்மூலம் தற்போதுள்ள மூன்று மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறை, 750,000 ரிங்கிட்டுக்குக் குறையும் என எதிர்பார்க்கிறோம்," என்று அவர் சொன்னார்.
உத்துசான் பத்திரிக்கைகள் விற்பனையாகாததால் அவை மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றார் திரு அப்துல் அஸிஸ். முன்னைய ஆளுங்கட்சியான அம்னோ உத்துசானைக் கட்டுப்படுத்துவதாகக் கூறும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் உத்துசான் குழுமம் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை நிறுத்தியுள்ளதாகவும் மலேசிய ஊடகங்கள் கூறிவந்தன. கோலாலம்பூரிலுள்ள உத்துசான் தலைமையகத்திற்கு வெளியே அந்நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் தங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படாதது குறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

