ஜி7 மாநாடு: மீண்டும் ரஷ்யாவைச் சேர்க்க டிரம்ப், மேக்ரூன் சம்மதம்

ஜி7 மாநாடு: மீண்டும் ரஷ்யாவைச் சேர்க்க டிரம்ப், மேக்ரூன் சம்மதம்

2 mins read

மாஸ்கோ: அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனை செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியபோது, "ரஷ்யாவை இந்த மாநாட்டில் பங்குபெறச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் மீண்டும் இந்த மாநாட்டை ஜி8 மாநாடாக நடத்தவும் நான் ஆதரவளிப்பேன்," என்றார்.

அடுத்த ஆண்டு ஜி7 நாடுகளின் மாநாடு அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்த்துக் கொள்வது தொடர்பாக இவ்வார இறுதியில் நடக்கவுள்ள ஜி7 நாடுகளின் மாநாட்டில் டிரம்ப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில், ர‌ஷ்ய அதிபர் புடின் தந்திரமாக செயல்பட்டதால், ஜி8 குழு அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரேனின் கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதையடுத்து ஜி8 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ர‌ஷ்யா வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே, ஜி7 மாநாட்டின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.