இந்தோனீசிய சிறை கலவரம்: தப்பியோடிய 250 கைதிகளைத் தேடும் அதிகாரிகள்

மனோக்வாரி: கலவரத்தின் போது இந்தோனீசிய சிறைச்சாலைக்குத் தீ வைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு சிறையில் இருந்து தப்பிய 258 கைதிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தப்பியவர்களில் முக்கிய குற்றவாளிகள் இருப்பதால் இந்தோனீசிய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்தோனீசியாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட கிழக்கு பாப்புவா பகுதியில் கொடி கம்பம் வளைக்கப்பட்டதாகக் கூறி பல மாணவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனீசியாவில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடந்து வருகின்றன.

ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

இது சோராங் என்ற நகருக்கும் பரவி அங்கிருக்கும் சிறையிலும் திங்கட்கிழமை வன்முறை வெடித்தது. கைதிகள் தங்கள் கையில் கிடைத்தவற்றை சிறை அதிகாரிகள், காவலர்களை நோக்கி எறிந்தனர். சிறைக்குள் தீயும் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்த  500 பேரில் 258 கைதிகள் தப்பிச் சென்றதாக உள்ளூர் நீதித்துறை அமைச்சு கூறியது. தப்பிச் சென்றவர்களில் 5 பேர் மட்டுமே தானாக முன்வந்து சிறைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் சொன்னார். 

சிறையில் அமைதி திரும்பினாலும் செவ்வாய்க்கிழமையன்று சோராங் பகுதியில் 500 பேர் மீண்டும் பேரணி சென்றனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி் போலிசார் அவர்களைக் கலைத்தனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்த பகுதிகளில் 1200 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.