ரொஹிங்யா அகதிகள் நாடு திரும்ப மறுப்பு

ரொஹிங்யா அகதிகள் நாடு திரும்ப மறுப்பு

1 mins read

காக்ஸ் பசார்: பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளை அவர்களுடைய சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

சொந்த நாடான மியன்மாருக்குத் திரும்ப அவர்கள் மறுத்துவிட்டனர்.

பங்ளாதேஷ் நாட்டில் தற்காலிக முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரொஹிங்யா அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேரை சொந்த நாடான மியன்மாருக்குத் திருப்பியனுப்ப பங்ளாதேஷும் மியன்மாரும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன.

இதன் ஒரு பகுதியாக 3,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இவர்களை மியன்மாருக்கு அனுப்புவதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மேலும் ரொஹிங்யா அகதிகளுக்காக போக்குவரத்து வசதிகள், தளவாட வசதிகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன என்று பங்ளாதேஷில் உள்ள அகதிகளுக்கான ஆணையர் அபுல் கலாம் சொன்னார்.

"இன்று 214 ரொஹிங்யா குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுடைய விருப்பம் தொடர்பான எந்தவித தகவலும் தற்போது வெளியிட முடியாது," என்றார் அவர்.

ஆனால் ஒரு குடும்பம்கூட நாடு திரும்ப விரும்பவில்லை என்று அகதிகளுக்கான அதிகாரி ஒருவர் கூறினார். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாடு திரும்ப மாட்டோம் என்று ரொஹிங்யா அகதிகள் கூறியிருப்பதாக அடையாளம் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் சொன்னார்.

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 700,000க்கும் மேற்பட்ட அகதிகள் எல்லையைக் கடந்து அண்டை பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.