ஈரானிய எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா வர்த்தகத் தடைகளைக் கடுமையாகச் செயல்படுத்தும்

ஈரானிய எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா வர்த்தகத் தடைகளைக் கடுமையாகச் செயல்படுத்தும்

1 mins read
28420a3e-9dde-4e57-9674-033e474da2ce
-

மத்திய தரைக்கடல் வழியாகத் தற்போது சென்றுகொண்டிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பலுக்கு எந்தத் தனியார் நிறுவனமும் உதவி செய்வதைத் தடுக்க அமெரிக்கா தனது வர்த்தகத் தடைகளை மேலும் கடுமையாகச் செயல்படுத்தவுள்ளது.

"அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை நாங்கள் கடுமையாகச் செயல்படுத்துவோம் என்று கப்பல் துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கூறினார்.

முன்னதாக 'கிரேஸ்-1' என அழைக்கப்பட்ட 'ஏட்ரியன் தர்யா' என்ற அந்தக் கப்பல், ஜிப்ரால்டார் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆயினும் அதனை கிரேக்க பிரதமர் மறுத்துள்ளார்.

"அந்த எண்ணெய்க் கப்பலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரேனும் உதவி செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அந்த அதிகாரி.

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தடைகளுக்குப் புறம்பாக, சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அந்தக் கப்பல் ஜிப்ரால்டாரில் கடந்த மாதம் தடுக்கப்பட்டது. சென்ற வாரம் ஜிப்ரால்டாரின் நீதிமன்றம் அந்தக் கப்பலை விடுவித்தது.

இதற்கிடையே ஈரான் கடந்த மாதம் கைப்பற்றிய 'ஸ்டெனா இம்பெரோ' என்ற பிரிட்டிஷ் கப்பல் விடுவிக்கப்படும் என்று சுவீடனின் தொலைக்காட்சி ஊடகம் தெரிவித்துள்ளது.