பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவைப் பற்றிய மிரட்டல் செய்தி 'உண்மையல்ல'

பெட்டாலிங் ஜெயா: பிரிக்ஃபீல்ட்ஸிலுள்ள லிட்டில் இந்தியாவில் கலவரம் ஏற்படப்போவதாகக் கூறும் குறுந்தகவல் வேகமாகப் பரவியதை அடுத்து அந்தத் தகவல் பொய் என்று மலேசிய போலிசார் உறுதி செய்துள்ளனர்.

அங்கு நாளை இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை கலவரம் ஒன்று நடக்கப்போவதாகக் குறிப்பிட்ட அந்தக் குறுஞ்செய்தி, அந்த வட்டாரத்திற்குப் போகாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.

சமூக ஊடகங்களிலும் குறுந்தகவல் தளங்களிலும் பரவிய இந்தச் செய்தி உண்மையல்ல என்று பிரிக்ஃபீல்ட்ஸின் தற்காலிக 'ஓசிபிடி சூப்பரிண்டெண்டன்ட்' அரிஃபாய் தராவே தெரிவித்திருக்கிறார்.

லிட்டில் இந்தியாவில் நிலவரம் பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார். இத்தகைய பொய்த் தகவல்களால் மக்கள் பாதிப்படைவதால் அத்தகைய செய்திகளை மக்கள் எளிதில் நம்பிவிடவேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.