பனை எண்ணெய்யைக் காடழிப்புடன் தொடர்புபடுத்துவது "அடிப்படையற்றது": மகாதீர்

பனை எண்ணெய்யைக் காடழிப்புடன் தொடர்புபடுத்துவது "அடிப்படையற்றது": மகாதீர்

2 mins read
897a6a84-8f70-40c4-89f4-6828f6910afc
-

கோலாலம்பூர்: பனை எண்ணெய் உற்பத்தியைக் காடழிப்புடன் தொடர்புபடுத்துவது "அடிப்படையற்றது, நியாயமற்றது, காரணமற்றது" என்றும், பனை எண்ணெய் தொழில்துறை பொறுப்புடன் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) கூறினார்.

கால்நடை வளர்ப்பு, சோயா விதை உற்பத்தி ஆகியவற்றுடன் பனை எண்ணெய் உற்பத்தியும் காடழிப்புக்கான முக்கிய காரணமாக இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. காடுகள் அழிவது குறித்த அக்கறையினால், 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களிலிருந்து பனை எண்ணெய்யை நீக்கும் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாண்டு தொடக்கத்தில் நிறைவேற்றியது. ஆனால், "பனை எண்ணெய்யைக் காடழிப்புடன் தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது, நியாயமற்றது, காரணமற்றது," என்று மலேசியக் காடுகள் தொடர்பான நிகழ்ச்சியில் டாக்டர் மகாதீர் கூறினார்.

"நமது மக்களின் சமூக, பொருளாதார நலனை உயர்த்துவதற்குப் பனை எண்ணெய் தொழில்துறையையே பெரிதும் சார்ந்திருக்கும் மலேசியாவுக்கு இத்தகைய கூற்றுகள் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன," என்றார் அவர்.

மலேசியாவின் பனை எண்ணெய் தொழில்துறை பொறுப்பான முறையில் நீடித்து நிலைக்கத்தக்கதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் மகாதீர் சொன்னார்.

பனை எண்ணெய்யின் ஆகப்பெரிய உற்பத்தியாளரான இந்தோனீசியாவும், இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவும், உலகில் பயன்படுத்தப்படும் பனை எண்ணெய்யில் சுமார் 85 விழுக்காட்டை விநியோகிக்கின்றன. இந்த எண்ணெய்யில் பெரும்பகுதி உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

போர்னியோவிலும் மலேசியாவின் மற்ற பகுதிகளிலும் இன்றுவரை காடழிப்பு தொடர்வதாகச் சுற்றுப்புறக் காப்பாளர்களும் உள்ளூர் மக்களும் கூறுகின்றனர். ஆனால், பனை எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதற்காக நிலத்தை விரிவுபடுத்தாமல் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் மலேசியா கவனம் செலுத்துவதாகவும் டாக்டர் மகாதீர் சொன்னார். அதோடு, பனைமரத் தோட்டங்களின் பரப்பளவை 6.55 மில்லியன் ஹெக்டராக 2023ஆம் ஆண்டுக்குள் அரசாங்கம் கட்டுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.