ஜப்பான் பிரதமர்: தென்கொரியா நம்பிக்கையை சீர்குலைக்கிறது

தோக்கியோ: ராணுவ உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற தென்கொரியாவின் முடிவு பரஸ்பர நம்பிக்கையை சீர்குலைப்பதாகக் கூறியுள்ளார் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே.

மேலும் வட்டார அமைதிக்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றப் போவதாகவும் அவர் உறுதியளித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒப்பந்தம் கடந்த 2016ல் தொடங்கியது.

ஜி7 மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்னர் பேசிய அவர், “வட்டார அமைதிக்காகவும் ஜப்பானின் பாதுகாப்பிற்காகவும் அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்,” என்று அவர் சொன்னார்.

முன்னுரிமை வர்த்தகப் பட்டியலில் இருந்து தென்கொரியாவை நீக்கும் ஜப்பானின் முடிவைத் தொடர்ந்து, ராணுவ ஒத்துழைப்பில் இருந்து  பின் வாங்குவதாக தென்கொரியா கூறியுள்ளது.

1910 முதல் 1945ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஜப்பானின் காலனித்துவ ஆதிக்கத்தின் போது, தென்கொரிய மக்களின் கட்டாய உழைப்பிற்காக,  1965ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இழப்பீடு கொடுத்துவிட்டதாகக் கூறிவருகிறது ஜப்பான்.

ஆனால், தென்கொரிய நீதிமன்றமோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஜப்பான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

Loading...
Load next