‘அமேசான் காட்டுத் தீ விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட வேண்டாம்’

ரியோ டி ஜெனிரோ: உலக நாடுகளின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு ராணுவப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார். 

அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று பிரான்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

காட்டுத்தீ பொலிவியா நாட்டை சுற்றியுள்ள அமேசான் காடுகளிலும் பரவி வருவதால், அமேசான் காடுகள் வழியாகப் பயணிகள் விமானங்கள் பறக்க பொலிவியா விமான போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே  காட்டுத் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் நேற்று முன்தினம் போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த இரு வாரங்ககளுக்கு மேலாக அமேசான் காடுகளில் தீ எரிந்து வருகின்றது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்  மேக்ரூனும் ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தேர்சும் அமேசான் காட்டுத் தீச்சம்பவங்கள் தொடர்பில் தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்,  அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசிலுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

ஆனால், பிரேசில் அதிபரோ அமேசான் காட்டுத் தீ விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Loading...
Load next