கருத்து மோதல்களுடன் தொடங்கிய ஜி7 மாநாடு

கருத்து மோதல்களுடன் தொடங்கிய ஜி7 மாநாடு

2 mins read

வாஷிங்டன்: ஜி7 நாடுகளின் ஆண்டு உச்சநிலை மாநாட்டில் உலகளாவிய வர்த்தகப் பதற்றம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது, அமேசான் காட்டுத் தீ உள்ளிட்டவை குறித்து அதன் தலைவர்களிடையே கருத்து மோதல்கள் வெடித்தன.

ஒருமித்த கருத்துடன் செயல்படுவதில் அண்மைய ஆண்டுகளாக தடுமாறி வரும் இந்நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பாக இம்மாநாடு பார்க்கப்படுகிறது.

பிரான்சில் நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.

இம்மாநாட்டில் தற்காப்பு, ஜனநாயகம், பாலின சமத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் திட்டமிட்டுள்ளார்.

"தற்போது உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள்ளே சுருங்கி வருகின்றன. பிற நாடுகளுடன் நல்ல உறவை மேற்கொள்ள அவை முன்வருவதில்லை.

இது ஆரோக்கியமான போக்கு கிடையாது. இது மிக மோசமான விளைவையே ஏற்படுத்தும். உலக வளர்ச்சிக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்று பிரான்ஸ் அதிபர் மாநாட்டின் தொடக்கத்தில் பேசினார்.

இதற்கிடையே, மாநாட்டிற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றிய அதிபர் டோனல்ட் டஸ்க், "இம்மாநாடு அதன் தலைவர்களின் ஒற்றுமைக்கு கடினமான சோதனையாக இருக்கும்," என்றார்.

மேலும் ஒருமித்த கருத்துகளை எட்டுவதில் கடினப் போக்கு அதிகரித்துக் கொண்டே போவதாகவும் அவர் சொன்னார்.

"இது எங்கள் அரசியல் சமூகத்தை மீட்டெடுப்பதற்கான கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்," என்று அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் இருந்து டிரம்ப் முன்னதாகவே வெளியேறியதால் அம்மாநாடு கசப்பான முறையில் முடிந்தது.

மெக்ரோனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், "இவ்வார இறுதியில் நாங்கள் பல விஷயங்களைச் சாதிப்போம்," என்றார்.

மேலும் பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்தப் பிறகு பேசிய டிரம்ப், பிரெக்சிட் ஒப்பந்தத்தினை முன்னெடுப்பதற்கான சிறந்த நபர் போரிஸ் ஜான்சன் எனச் சொன்னார்.

இதற்கிடையே, ஜி7 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியபடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலிசார் அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டினர்.