ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய தலைநகரம் கிழக்கு கலிமந்தானில் அமையும் என்று அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ நேற்று அறிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், "இந்தோனீசியாவின் நிர்வாக, நிதி, வர்த்தக, சேவை மையமாக விளங்கி வரும் ஜகார்த்தா, பெரும் சுமையைத் தாங்கி நிற்கிறது.
"அத்துடன் ஜகார்த்தா இருக்கும் ஜாவா தீவு இந்தோனீசியாவின் 150 மில்லியன் மக்கட்தொகையில் 54 விழுக்காட்டைக் கொண்டுள்ளது," என்று அவர் விளக்கினார்.
இந்தோனீசிய அதிபரின் இந்த முடிவுக்கு பெருமளவிலான நிதி தேவைப்படும் என்பதால், இதற்கு சட்டபூர்வ அதிகாரம் வழங்க நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இந்தோனீசிய தலைநகரத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தின்படி, ஜகார்த்தா அந்நாட்டின் வர்த்தக மையமாக விளங்கும் என்றும் புதிய தாக அமையவுள்ள தலைநகரம் நிர்வாக மையமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிய தலைநகருக்காக அந்நாட்டு அரசு கலிமந்தான் தீவில் கிழக்கு கலிமந்தான், மத்திய கலிமந்தான் என இரு இடங்களைத் தேர்வு செய்திருந்தது.
இந்தோனீசியா 1949இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுநாள் வரை ஜகார்த்தா தலைநகரமாக விளங்கி வந்துள்ள நிலையில், அங்கு போக்கு
வரத்து நெரிசல், பொதுமக்கள் நெரிசல், பரவலான காற்று தூய்மைக்கேடு, அடிக்கடி மழையினால் ஏற்படும் வெள்ளம் போன்றவற்றால் அவதியுற்றது.
மேலும், ஜகார்த்தா நகரின் நிலமட்டம் ஆண்டுக்காண்டு 10 சென்டிமீட்டர் அளவுக்கு கீழிறங்கிச் செல்வதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனீசியாவின் தலைநகரத்தை மாற்றுவது தொடர்பாக பல்லாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் அதிபர் ஜோக்கோவிற்கு முந்தைய அதிபர்கள் இந்தப் பிரச்சினையில் விரைந்து முடிவெடுக்கவில்லை.
எனினும், விரிவடைந்த ஜகார்த்தா நகரம் 30 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள நிலையிலும், ஆண்டுதோறும் பல்லாயிரம் வாகனங்கள் சாலைகளில் வலம் வருவதாலும் காற்று தூய்மைக்கேடு சுகாதாரமற்ற நிலையை எட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய தலைநகரத்தை நிர்மாணிப்பதற்கு கிட்டத்தட்ட $45 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் நிறைவேறுமானால், கட்டுமானப் பணிகள் 2021ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் அரசின் சில துறைகள் 2024ஆம் ஆண்டு புதிய தலைநகருக்கு மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

