பெய்ஜிங்: அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மோசமடைவதை சீனா விரும்பவில்லை என்று சீனத் துணைப் பிரதமர் லியூ ஹ தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக நிதானமான, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் மூலம் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கிடையே, சீனாவைவிட்டு வெளியேற அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததற்கு சீன வெளிஉறவு அமைச்சு நேற்று கண்டனம் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று 75 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள அமெரிக்க இறக்குமதிக்கு கூடுதலாக 5லிருந்து 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. 300 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள சீன பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவுக்கு இது பதிலடியாகக் கருதப்பட்டது.
சீனாவின் இந்த அறிவிப்பை அடுத்து, அந்த 300 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள சீனப் பொருட்களுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டார். வர்த்தகப் போரை மோசமாக்க அமெரிக்கா, சீனா, உலக நாடுகள் விரும்பவில்லை என்று சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் பொருளியல் ஆலோசகரான துணைப் பிரதமர் லியூ நேற்று கூறினார்.
இதற்கிடையே, வர்த்தகப் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க சீனா கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

