ஹாங்காங்: ஹாங்காங்கின் வீதிகளில் போராட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல அதிகாரிகளை எதிர்த்துச் செயல்பட போராட்டக்காரர்களுக்குக் கூடுதல் தைரியம் ஏற்படுவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது, போராட்டக்காரர்களிடையே காணப்படும் மூர்க்கத்தனம் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
போராட்டத்தின்போது அரசாங்கத்துக்கு எதிராக முழக்கமிடுதல், போலிசார் கண்ணீர் புகை பாய்ச்சும்போது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போராட்டக்காரர்களின் உத்தி தற்போது மாறியிருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுவாக தற்காப்பு உத்திகளை மட்டுமே கையாண்டு வந்த போராட்டக்காரர்கள் தற்போது அதிகாரிகளைத் தாக்கவும் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மூர்க்கத்தனமான கலவர உத்திகளை அவர்கள் பயன்படுத்துவதாக போலிசார் தெரிவித்தனர். இன்னும் கனமான தடுப்புகளைச் சாலைகளில் போடுவது, தங்களை நோக்கி வரும் போலிசார் தடுக்கி விழ சாலைகளின் குறுக்கே மீன்பிடி கயிறுகளைக் கட்டுவது, போலிசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசுவது, கலவரத் தடுப்புப் படையை நோக்கி கவண் வில் பயன்படுத்தி செங்கற்களை எறிவது, அதிகாரிகளைச் சூழ்ந்து உலோகக் கம்புகளைக் கொண்டு அடிப்பது போன்ற செயல்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க பயன்படுத்தப்படும் உத்திகளை ஹாங்காங் போலிஸ் மறுஆய்வு செய்து வருகிறது.
நேற்று முன்தினம் போராட்டம் மோசமடைந்ததால் கலவரத் தடுப்புப் படை முதல்முறையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்சியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளை நோக்கி போத்தல்களையும் செங்கற்களையும் வீசியதாக அறியப்படுகிறது.
ஒருகட்டத்தில் ஆறு போலிஸ் அதிகாரிகளை கும்பல் ஒன்று மூர்க்கத்தனமாக தாக்கியதால் தாக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் எச்சரிக்கை விடும் வகையில் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது அந்த அதிகாரி அவ்வாறு செய்ததாக ஹாங்காங் போலிஸ் படை அந்தச் செயலைத் தற்காத்துப் பேசியது.
கடந்த வாரயிறுதியில் நிகழ்ந்த போராட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, அதிகாரிகள் 36 பேரைக் கைது செய்ய நேர்ந்ததாக போலிசார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களின் 12 வயது சிறுவரும் ஒருவர்.

