பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குள் சச்சரவுகள் ஏற்பட்டு அது பிளவுபட்டு வருவதாக அம்னோ தலைவர் அஹமது ஸாஹித் ஹமிடி கூறியதை மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது நிராகரித்துள்ளார்.
அத்துடன் ஆதரவற்ற நிலையில் ஒரு தனி ஆளாக டாக்டர் மகாதீர் இயங்கி வருகிறார் என்று சொல்லப்பட்ட கூற்றையும் அவர் மறுத்துள்ளார்.
உலக சுற்றுப்பயண மாநாட்டில் நேற்று கலந்துகொண்டபோது திரு மகாதீர் செய்தியாளர்களிடம் பேசினார். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமும் ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் மகாதீரைப் பதவி இறக்கத் திட்டமிடுவதாகவும் ஹமிடி கூறியதை பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மறுத்துள்ளார்.
"நான் தனி ஆளாக இயங்குகிறேனா இல்லையா என்பதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம். நான் போகாத இடமில்லை. எங்கு நடந்து சென்றாலும் மக்கள் தேடி வந்து வணக்கம் சொல்லி எனக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
"கட்சியிலும் சரி அமைச்சரவையிலும் சரி முக்கிய விவகாரங்கள் குறித்து எல்லாரும் ஒற்றுமையாக இருந்து சேர்ந்துதான் முடிவெடுக்கிறோம்", என்றார் திரு மகாதீர்.
கட்சிக்குள்ளேயே நிலவும் சண்டைகளால் பக்கத்தான் ஹரப்பான் பிளவுபடும். அத்துடன் பிகேஆர் கட்சியைத் தனியாளாக வழிநடத்திச் செல்லும் தலைவராக டாக்டர் மகாதீர் உள்ளார் என்று திரு அஹமது ஸாஹித் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
மலேசிய இந்தியர் காங்கிரஸின் 73வது தேசிய பொதுப் பேரவைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தபோது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தலைமைத்துவத்துக்காக கட்சிக்குள் நிலவும் போராட்டங்களால் கூட்டணிக் கட்சி மெல்ல மெல்ல வலுவிழந்து வருவதாக அவர் சுட்டினார்.
பொதுத் தேர்தலின் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதுடன் பொருளியல் விவகாரங்களைச் சரியாகக் கையாளவில்லை என்பதன் அடிப்படையில் அடுத்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் வீழும் என்று நம்புவதாகவும் அகமது ஸாஹித் கூறியிருந்தார்.
முந்தைய அரசாங்கத்தின் திட்டங்களையே வேறு பெயர்களிட்டு அமல்படுத்தும் பக்கத்தான், புதிய திட்டங்களைக் கொண்டு வரத் திக்குமுக்காடுவதாகவும் அஹமது ஸாஹித் கூறினார். ஜப்பானின் ஜனநாயக கட்சியை உதாரணம் காட்டி அக்கட்சி புதிய ஆளும் கட்சியாக மூன்றே ஆண்டுகளுக்குத் தான் நிலைத்தது என்றும் பக்கத்தானுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார்.
"ஒழுங்காக இல்லை என்றால் அவர்களின் இடத்தை நாங்கள் கைப்பற்றலாம்," என்றார்.
சமூகத்திற்காக மலேசிய இந்தியர் காங்கிரஸ் பலவகைகளிலும் பங்காற்றி வருவதைச் சுட்டிக்காட்டி, கட்சியை வெகுவாகப் பாராட்டினார் திரு அஹமது ஸாஹித்.

