இந்தியாவுக்கு ஆகாயவெளியைத் தடைசெய்ய பாகிஸ்தான் பரிசீலனை: அமைச்சர்

இந்தியாவுக்கு ஆகாயவெளியைத் தடைசெய்ய பாகிஸ்தான் பரிசீலனை: அமைச்சர்

1 mins read
8f128db3-d85d-45ea-8494-32cada419612
பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான். படம்: கோப்புப் படம் (ஏஃப்பி) -

பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் ஆகாயவெளி பயன்பாட்டை முற்றாகத் தடை செய்யவும், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுடன் இந்தியா செய்யும் நிலவழி வர்த்தகத்திற்குத் தடை விதிக்கவும் பரிசீலித்து வருவதாக அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

"இந்தியாவுக்கு ஆகாயவெளியை முற்றாக அடைப்பது பற்றி பிரதமர் பரிசீலித்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் வர்த்தகத்திற்கு பாகிஸ்தானின் தரைவழிப் பாதைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கலாம் என அமைச்சரவை கூட்டத்தில் யோசனை கூறப்பட்டது.

இத்தீர்மானங்களுக்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன...#மோடி தொடங்கி வைத்ததை நாங்கள் முடித்து வைப்போம்!" என ஃபவத் சௌத்ரி வெளியிட்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஏன் தற்போது இந்நடவடிக்கைகளை எடுப்பது பற்றி பரிசீலிக்கிறது என்பதற்கான மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் பாகிஸ்தானிய போராளிக் குழு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு ஆகாயவெளி மூடப்பட்டிருந்தது.

ஆனால், ஜூலை மாத மத்தியில் ஆகாயவெளியை பாகிஸ்தான் மீண்டும் திறந்துவிட்டது.

முஸ்லிம் பெரும்பான்மையுள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பிரதமர் மோடி இம்மாதம் நீக்கியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான பதற்றநிலை மோசமடைந்திருக்கிறது.