ஜகார்த்தாவை நவீனப்படுத்த US$40 பில்லியன்: இந்தோனீசியா உறுதி

ஜகார்த்தாவை நவீனப்படுத்த US$40 பில்லியன்: இந்தோனீசியா உறுதி

2 mins read
df4d9b08-1eef-4027-9d97-3b45a141d6e2
போர்னியோ தீவில் புதிய தலைநகரை அமைக்கத் திட்டமிட்டுள்ளபோதும் இப்போதைய தலைநகரான ஜகார்த்தா நவீனப்படுத்தப்படும் என்று இந்தோனீசிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (S$55.5 பில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

ஜகார்த்தா: போர்னியோ தீவில் புதிய தலைநகரை அமைக்கத் திட்டமிட்டுள்ளபோதும் இப்போதைய தலைநகரான ஜகார்த்தா நவீனப்படுத்தப்படும் என்று இந்தோனீசிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (S$55.5 பில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போர்னியோ தீவின் கிழக்கு கலிமந்தான் பகுதியில் புதிய தலைநகருக்கான இடத்தை இந்தோனீசியா தேர்வு செய்துள்ளது. புதிய தலைநகரை உருவாக்க 33 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், "இந்தோனீசியாவில் ஜகார்த்தாவே எல்லாவற்றுக்கும் மையமாகத் திகழ்கிறது. நிர்வாக மையத்தை மட்டும்தான் நாங்கள் இடமாற்றவுள்ளோம். மற்றபடி நிதி மையங்களும் வர்த்தகங்களும் தொழில்களும் அங்கேயே நீடிக்கும்," என்று இந்தோனீசியாவின் திட்டமிடல் துறை அமைச்சர் பங்பாங் புரோட்ஜோங்கோரோ தெரிவித்துள்ளார்.

உலகில் மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள நகரங்களுள் ஜகார்த்தாவும் ஒன்று. அங்கு பத்து மில்லியனுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இதையடுத்து, "அங்கு மக்கள்தொகை நெருக்கத்தைக் குறைக்கவேண்டும் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. அதனால் தான் தலைநகரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தா நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என மக்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. தண்ணீர், கழிவுநீர், காற்று மாசுபாடு எனப் பல பிரச்சினைகள் உள்ளன," என்றார் அமைச்சர்.

ஜகார்த்தா மக்கள்தொகையில் ஐந்தில் மூவருக்கு மட்டுமே தண்ணீர்க் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது.

மற்றவர்கள் கிணறு தோண்டி, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல்மட்டம் உயர்ந்து வருவதால் ஜகார்த்தாவின் சில பகுதிகள் ஆண்டுக்கு 11 அங்குலம் என்ற அளவில் நீரில் மூழ்கி வருகின்றன. இதன் காரணமாக, ஜகார்த்தாவே உலக அளவில் அதிவேகமாக மூழ்கிவரும் நகரமாகக் கூறப்படுகிறது.

இப்போதைய வேகத்திலேயே போனால் 2050ஆம் ஆண்டிற்குள் ஜகார்த்தாவின் 95% பகுதி மூழ்கிவிடக்கூடும் என்று நிலவியல் நிபுணரான திரு ஹெரி ஆண்டிரியாஸ் எச்சரித்து இருக்கிறார்

இதையடுத்து, அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் நீர்க் குழாய் வசதி ஏற்படுத்தித் தர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், புதிய கழிவுநீர் அமைப்பும் கட்டப்படவுள்ளது.

பெருவிரைவு ரயில் சேவை, பேருந்துகளுக்கென பிரத்தியேக சாலை வழித்தடங்கள், மேம்பாலங்கள் ஆகியவற்றுக்குப் பெரும் தொகை செலவிடப்படும் என்று அமைச்சர் பம்பாங் கூறினார்.