கோலாலம்பூர்: மலேசிய உயர் நீதிமன்றத்தில் 1எம்டிபி நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை முறைகேடாக திருத்தியமைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு ஆவணங்களை தற்காப்புத் தரப்புக்கு விரைந்து வழங்கவேண்டும் என உத்தர
விடப்பட்டுள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது சைனி மஸ்லான், தற்காப்பு தரப்பு கோரும் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யுமாறு அரசு தரப்புக்கு கூறினார்.
"வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பரிசீலிக்க தற்காப்பு தரப்புக்கு போதுமான அவகாசம் தரும் வகையில் அவர்களுக்கு தேவைப்படும் எல்லா ஆவணங்
களையும் அரசுத் தரப்பு வழங்க முடியும் என்று நம்புகிறேன்.
"எல்லா ஆவணங்களையும் வழங்குவது இயலாத செயல் என்பதை நான் அறிவேன். ஆனால், இந்த வழக்கு விசாரணை தாமதமில்லாமல் நடக்க, முடிந்த மட்டும் கேட்கப்படும் ஆவணங்களை வழங்க வேண்டும்," என்று கூறி, விசாரணைக்கு முந்திய அடுத்த கட்ட கலந்துரையாடலை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, அரசுத் தரப்பு சாட்சிகள், அவர்களின் சாட்சியங்கள் தொடர்பான விரிவான பட்டியலைத் தயாரிப்பதில் தமது தரப்பு ஈடுபட்டிருப்பதாக அரசு வழக்கறிஞர் ரோஸாலியானா ஸக்காரியா நீதிமன்றத்தில் தெரி
வித்தார்.
நஜிப் ரசாக்கின் தலைமை வழக்கறிஞர் முகம்மது ஷஃபி, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞரான கோபால் ஸ்ரீராமுக்கு எதிரான மனுவில் தமது தரப்புக்கு வெற்றி கிடைத்தால் இந்த வழக்கு ரத்தாகிவிடும் என்றும் அந்த நிலையில் ஒன்று இது மறுவிசாரணைக்கு செல்ல வேண்டும் அல்லது குற்றச்சாட்டுகளிலிருந்து தமது கட்சிக்காரர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த வழக்கில் தமது கட்சிக்காரரான நஜிப் ரசாக், ஜோ லோ என்பவரால் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அவரே பல வங்கிகள், 1எம்டிபி நிறுவனம் ஆகியவற்றை ஏமாற்றியதாகவும் ஷஃபி விளக்கினார்.
இதில் ஆவணங்கள் முறை கேடாக திருத்தியமைக்கப்பட்டது என்று கூறினால் அது தமது கட்சிக்காரருக்கு தெரிந்திருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் அப்பொழுதுதான் அவர் குற்றம் புரிய சதிச் செயலில் ஈடுபட்டார் என்று கூற முடியும் என்றும் திரு ஷஃபி வாதிட்டார்.

