ஹாங்காங்: தொடர்ந்து 13வது வார இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஹாங்காங் மக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு போலிஸ் தடை விதித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரயிறுதியில் நடந்த போராட்டங்களின்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்பைக் காரணம் காட்டி, 'சிவில் மனித உரிமை முன்னணி' எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு போலிஸ் அனுமதி மறுத்துவிட்டதாக 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அக்குழுவின் துணை ஏற்பாட்டாளர் திருவாட்டி போனி லியூங் சொன்னதாக 'புளூம்பர்க்' செய்தி கூறுகிறது.
முன்னதாக, முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் நாளைக்குள் செவிசாய்க்காவிடில் திங்கட்கிழமை முதல் இருநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நாளைய ஆர்ப் பாட்டத்திற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அது மக்களை மேலும் சினமூட்டச் செய்யும் என்றும் அதன் எதிரொலியாக இருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆயினும், ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்திருப்பது குறித்து கருத்துரைக்க போலிஸ் மறுத்துவிட்டது.
இதனிடையே, ஹாங்காங்கில் பாதுகாப்புப் பணிகளுக்காக புதிய படைப் பிரிவு தொகுதிகளை சீன ராணுவம் களமிறக்கியுள்ளது.
இது வழக்கமான நடவடிக்கைதான் என்று சீன அரசாங்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சீனாவின் சிறப்பு அந்தஸ்துக்குரிய பகுதியாக இருந்து வரும் ஹாங்காங்கின் தற்காப்புக்காக சீன ராணுவப் படை யினர் சுழற்சி முறையில் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இப்போது 22வது முறையாக அந்தச் சுழற்சி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்துவரும் சீனா, அமெரிக்காவும் பிரிட்டனும் ஹாங்காங்கின் உள்விவகாரத்தில் தலையிட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

