வாஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் தனக்குச் சொந்தமானது என சீனா உரிமை கோரி
வரும் தீவுக்கூட்டத்தை ஒட்டி அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் சென்றது புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் பதற்றங்கள் நீடித்துவரும் வேளையில் அமெரிக்காவின் இச்செயலால் சீனா சினமடையலாம் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது போர்க்கப்பல் ஒன்று, சீனத் துறைமுக நகரான சிங்டாவுக்கு வருகை தர அனுமதிக்கும்படி அமெரிக்க கோரிக்கை விடுத்ததாகவும் அதைச் சீனா ஏற்க மறுத்துவிட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த புதன்
கிழமை வெய்ன் இ-மேயர் எனும் அமெரிக்கப் போர்க்கப்பல், சீனா சொந்தம் கொண்டாடி வரும் ஃபியரி கிராஸ், மிஸ்சீஃப் ரீஃப்ஸ் ஆகிய தீவுகளில் இருந்து 12 கடல்மைல் தொலைவில் சென்றது.
சீனாவின் அதிகப்படியான கடல் எல்லைக் கோரிக்கைகளுக்குச் சவால் அளிக்கும் விதமாகவும் அனைத்துலகச் சட்டப்படி நீர்வழிகளில் செல்வதற்கான உரிமை
யைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜப்பானைத் தளமாகக் கொண்ட அமெரிக்கக் கடற்படையின் ஏழாம் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனிடையே, சீனாவிற்குச் சொந்தமான கடற்பரப்பில், அனுமதியின்றி அமெரிக்கக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்ததாகவும் உடனடியாக அவ்விடத்தைவிட்டுச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சீன ராணுவப் பேச்சாளர் லி ஹுவாமின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

