பிரிட்டிஷ் நாடாளுமன்ற செப்டம்பர் மாதக் கூட்டத்தை ரத்து செய்ய பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்துள்ளார். இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்சிட்) தொடர்பான விவாதத்துக்கு மிகக் குறைந்த நேரமே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு கடைசி நாள் அக்டோபர் 31ஆம் தேதி.
செப்டம்பர் 3ஆம் தேதி கூடும் நாடாளுமன்றம் பின்னர் ஒத்திவைக்கப்படும். முன்னதாக, செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அரசுக்கு எதிராக நம்பிக்கை
யில்லாத் தீர்மானம் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.
அந்த முயற்சியைத் தோற்கடிக்கும் விதமாக திரு ஜான்சனின் இந்த எதிர்பாராத முடிவு அமைகிறது. அக்டோபர் 14ஆம் தேதி பிரிட்டிஷ் அரசியார் இரண்டாம் எலிசபெத் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வரை நாடாளுமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவுக்கு சுமார் இரண்டரை வாரம் முன்பாகத்தான் நாடாளுமன்றம் கூடும். ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடுப்பதற்கு இந்த காலக்கெடு போதுமா என்பதே மக்களின் இப்போதைய கேள்வி.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை எதிர்ப்பவர்கள் மட்டுமின்றி, ஆதரிப்பவர்களும்கூட அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து பிரிட்டிஷ் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே உட்பட பிரிட்டனின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் இரவு இந்த முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் சில பேரணிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இணையத்தில் பதிவு செய்யப்பட்ட பொது மனு ஒன்றில், சில மணிநேரத்திலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்கள் குவிந்தன.
"ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ரத்து செய்யப்பட்டால் அல்லது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலொழிய, நாடாளுமன்றக் கூட்டம் ரத்து செய்யப்படவோ கலைக்கப்படவோ கூடாது," என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களுடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அக்டோபர் 14ஆம் தேதி தொடங்க திரு ஜான்சன் விரும்புகிறார்.
நாடாளுமன்றக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், எவ்வித உடன்பாடுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடுப்பது குறித்து விவாதிக்க தேவையான நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு தொடக்கத்தில் இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், இருதரப்பும் உடன்பாட்டை எட்டுவதற்கு மேற்கொண்ட மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால், அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தொடக்கக் காலத்திலிருந்தே பிரெக்சிட்டிற்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ள திரு ஜான்சன், பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு உடன்பாடு ஏற்படுகிறதோ இல்லையோ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று கூறியிருந்தார்.

