கொலை செய்யப்பட்ட மலேசிய தம்பதியரின் சடலங்கள் இவ்வாரம் இரண்டு பயணப்பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
52 வயது திருமதி டான் சியூ மீ, இரண்டு தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களால் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) முதலில் கண்டுபிடிக்கப்பட்டார். சிலாங்கூரின் ஷா அலாம் பகுதியில் நிலமட்டத்துக்குக் கீழ் உள்ள கம்பிவடங்களை ஊழியர்கள் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில் காலை 5.30 மணி அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
திருமதி டானின் மார்பு, வயிற்று பகுதிகளில் 13 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அத்துடன் அவரின் கழுத்தில் உள்ள வெட்டுக் காயம் கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
திருமதி டானின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
இந்நபர்களை விசாரித்ததில் திருமதி டானின் கணவரான திரு லிம் ஆ கீயின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது. திரு லிம்மின் சடலம் அதே வகையில் பயணப்பெட்டியில் திணிக்கப்பட்டு ஷா அலாம் பகுதியில் எறியப்பட்டது.
திருமதி டானின் சடலம் அவரின் இறப்புக்கு 72 மணி நேரத்திற்குப் பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் முக்கிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன என்றும் ஷா அலாம் காவல்துறையன் தலைவரான திரு பஹாருதீன் மாட் டாயிப் (Baharudin Mat Taib) கூறினார்.

