மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் நீதிபதி ஒருவர் பிறப்பித்த அதிரடி உத்தரவால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை ஆஸ்திேரலிய அரசாங்கம் இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியது.
இந்த நிலையில் மெல்பர்ன் நகர நீதிபதி ஹீதர் ரிலே இரவு நேரத்தில் அவர்களை நாடு கடத்த தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் டார்வின் நகருக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் நால்வரும் இறக்கிவிடப்பட்டனர்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் படகு வழியாக வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. தற்போதைய பழமைவாத அரசாங்கம் கடுமையான குடிநுழைவுக் கொள்கைகளை கடைபிடித்து வருவதால் அந்நாடு குறைகூறலுக்கு ஆளாகியுள்ளது.
2012ல் நடேசலிங்கமும் 2013ல் பிரியாவும் தஞ்சம் கேட்டு தனித் தனியாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்தனர். ஆஸ்திேரலியாவில் சந்தித்துக்கொண்ட இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த தருணிக்கா, 2, கோபிகா, 4, ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், தமிழ்க் குடும்பம் அகதிகள் இல்லை என்றும் அவர்களை பாதுகாக்க அகதிகளுக்கான தகுதியில்லை என்றும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் இலங்கையில் தமிழ்க் குடும்பத்துக்கு ஆபத்து உள்ளது என்று தமிழ் அகதிகள் மன்றத்தின் பேச்சாளர் அரண் மயில் வாகனம் கூறியுள்ளார்.

