ஹாங்காங்கில் சமூக ஆர்வலர்கள் கைது

ஹாங்காங்கில் சமூக ஆர்வலர்கள் கைது

1 mins read

ஹாங்காங்: இன்று சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு போலிசார் தடை விதித்துள்ள வேளையில் ஆர்ப்பாட்டங்களுக்கு முக்கிய காரணமான சமூக ஆர்வலர்களை நேற்று போலிசார் கைது செய்துள்ளனர். டெமோசிஸ்டோவின் ஜோஷுவா வோங், எக்னஸ் சோவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக ஹாங்காங் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரணி ஏற்பாட்டாளர் ஜிம்மி ஷாம் உட்பட சமூக ஆர்வலர்களை அடையாளம் தெரியாத சிலர் தாக்கியுள்ள வேளையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

திரு வோங், ஹாங்காங்கில் தங்களுடைய எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்வதற்குப் போராடி வரும் ெடமோசிஸ்டோ குழுவை நிறுவியவர். சவுத் ஹாரிசன் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் காலை 7.30 மணியளவில் திரு வோங் கைது செய்யப்பட்டார்.

சாலையில் தனியார் கார் ஒன்றில் வோங்கை உள்ளே தள்ளி அழைத்துச் செல்லப்பட்டார் என்று டுவிட்டர் பதிவில் ஒருவர் தெரிவித்தார்.

வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த கட்சியின் மற்றொரு உறுப்பினரான செல்வி சோவும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஹாங்காங்கில் நிலைமை மோசமானால் அங்குள்ள சீனாவின் துருப்புகள் கைகட்டி வேடிக்கை பார்க்காது என்று சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான 'சைனா டெய்லி' கூறியுள்ளது.