புத்ரா ஜெயாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய தினம்

புத்ரா ஜெயாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய தினம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் 62வது தேசிய தினம் புத்ரா ஜெயாவில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புத்ரா ஜெயாவில் நடந்த கொண்டாட்டத்தில் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாயாதுதின் அவரது துணைவியார், மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர், அவரது துணைவியார், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் கலந்து கொண்டனர்.

மலேசிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.

மலேசிய துணைப் பிரதமர் வான் அசிசா, ஊடகத்துறை மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உட்பட இதர அமைச்சர்களும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொண்டாட்டத்தில் பங்கெடுத்த 53 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2,500 மாணவர்கள் படைத்த கிராஃபிக் நடனம் பார்வையாளர் களை ஈர்த்தது.

தேசிய தின அணிவகுப்பில் 34 அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.