வாஷிங்டன்: வர்த்தக உடன்பாடு காண்பது தொடர்பில் அமெரிக்காவையும் சீனாவையும் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ள நிலையில் முன்பு அறிவித்தபடி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கவிருந்த கூடுதல் வரி இன்று முதல் நடப்புக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பை இனியும் தாமதப்படுத்த முடியாது என்றும் சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நடவடிக்கை தேவைப்படுவதாகவும் திரு டிரம்ப் கூறினார். புதிய வரி விதிப்பால் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் காலணிகள் உட்பட ஏராளமான பொருட்கள் பாதிக்கப்படவுள்ளன.
பதிலுக்கு சீனாவும் 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு இன்று முதல் வரி விதிக்கவுள்ளது. சீனாவின் பொருளியல் கொள்கைகளை அதிபர் டிரம்ப் குறை கூறிவருகிறார்.
அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்து வருகின்றன. இந்த வர்த்தகப் பூசல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரிய வில்லை.

