ஹாங்காங்: ஆர்ப்பாட்டங்களுக்கு ஹாங்காங் போலிசார் விதித்திருந்த தடையையும் மீறி அரசாங்க தலைமையகத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி யும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைக்க முயன்றதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
போலிசாரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முக்கிய சாலைகளை ஆக்கிரமித்தனர்.
அட்மிரால்டி பகுதியில் உள்ள அரசாங்க தலைமையகம் மற்றும் சீனாவின் சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்ட மன்ற அலுவலகத்தை நெருங்கு வதைத் தடுக்க அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தடுப்புகளுக்கு அருகில் நின்றிருந்த போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலிசார் மிளகு கரைசலைத் தெளித்ததாக தகவல்கள் கூறின.
கடந்த வாரம் நடந்தது போன்ற சம்பவம் இந்த வார இறுதியில் நடைபெறாமல் இருக்க போலிசார் அப்பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். முன்னதாக அட்மிரால்டி பகுதியில் உள்ள பிரபல வர்த்தக வட்டாரம், மத்திய வர்த்தக வட்டாரம் உட்பட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். அவ்விடத்தைவிட்டுச் செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு போலிசார் எச்சரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் சகதி காணப்பட்ட போதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் குடைகளைப் பிடித்தவண்ணம் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர். "சுதந்திரத்திற்கான போராட்டம் இது" என்ற முழக்கவரிகளை கூக்குரலிட்டவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றதாக தகவல்கள் கூறின.
ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு ஹாங்காங் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாய் யிங் புன் வட்டாரத்தில் உள்ள சீனாவின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கட்டடங்களைச் சுற்றிலும் தண்ணீரால் நிரப்பப்பட்ட தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அலுவலகத்திற்குச் செல்லும் முக்கிய சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. யிங் புன் ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் எதுவும் நிறுத்தப்படாது என்று சுரங்க ரயில் சேவை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

