டெக்சஸில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

டெக்சஸில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

2 mins read
faea09a8-658a-4375-801c-aef2da6ecd7d
துப்பாக்கிச்சூட்டில் மாண்டோருக்கான மெழுகுவர்த்தி அஞ்சலி. (படம்: ராய்ட்டர்ஸ்) -

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். போலிசார் உட்பட 21 பேர் காயமுற்றனர். மேற்கு டெக்சஸின் மிட்லாண்ட் நகரில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிக்காரன் சென்ற காரை போலிஸ்காரர் ஒருவர் ஒடெஸ்ஸா நகருக்கு அருகில் தடுத்து நிறுத்தியபோது, அவன் போலிஸ்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டான். அதில் மூன்று போலிசார் காயமடைந்தனர். தொடர்ந்து காரில் சென்ற அவன், ஒரு கட்டத்தில் தன் காரைக் கைவிட்டுவிட்டு, அஞ்சல் துறை வேன் ஒன்றைக் கடத்தினான். வேனில் அதிவேகமாகச் சென்ற கொடூரன், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், வணிக வளாகங்களை விட்டு வெளியே வந்தோர், திரையரங்கில் திரைப்படம் பார்த்து விட்டு திரும்பியோர் என அனைவர் மீதும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினான்.

இதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இறுதியாக ஒடெஸ்ஸா நகரில் உள்ள திரையரங்கிற்கு அருகே அவன் சென்ற வேனை போலிசார் சுற்றிவளைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்திற்கிடையே, திரையரங்கில் இருந்தவர்களைப் போலிசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கிச்சூடு குறித்த விவரம் அறிந்தோர் பதற்றத்துடன் அலறியபடி வெளியேறினர். இந்த கொடூரத் தாக்குதலை இரண்டு பேர் செய்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் தாக்குதல் நடத்தியது ஒருவன் தான் என்பதையும் அவன் 30 வயது மதிக்கத்தக்க வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞன் என்பதையும் போலிசார் உறுதி செய்தனர். எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை. ஒரு மாதத்திற்குள் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது. கடந்த நான்கு வாரங்களுக்கு முன், டெக்சஸின் எல் பாசோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்