லாகூர்: பாகிஸ்தானில் கட்டாய சமய மாற்றம் செய்யப்பட்ட இளம் பெண், மீட்கப்பட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டதாக வெளியான தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். பாகிஸ்தானில், லாகூர் அருகில் உள்ள நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த 19 வயது சீக்கிய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த கட்டாய மதமாற்றத்துக்கு பாகிஸ்தான் சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலையிட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கிடையே, குறிப்பிட்ட பெண்ணை மீட்ட போலிசார், அவர் பெற்றோரிடம் ஒப்படைத்ததாக நேற்று காலை செய்தி ஒன்று வெளியானது. மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தச் செய்தியை அந்தப் பெண்ணின் சகோதரர்கள் மறுத்துள்ளனர்.
"எங்கள் சகோதரி இன்னும் எங்களிடம் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
"எங்களுக்கான நீதியை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம்," என்று அவர்கள் கூறினர்.

