கேரி லாம்: பதவி விலக சீனாவிடம் அனுமதி கேட்கவில்லை

கேரி லாம்: பதவி விலக சீனாவிடம் அனுமதி கேட்கவில்லை

1 mins read
cac6fe3a-dd97-4fd8-bfe5-1f9f6a5a4ace
ஒலிப்பதிவை வெளியிட்டதற்காக ராய்ட்டர்சின் செயலைக் கண்டித்த ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம், அது ஏற்கத்தகாத செயல் என்றார். படம்: ஏஎஃப்பி -

பதவி விலகுவதற்காக சீனாவிடம் அனுமதி கேட்கவில்லை என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியிருக்கிறார்.

ஆயினும், வர்த்தகத் தலைவர்களுடனான கூட்டங்களின்போது, தான் எதிர்நோக்கும் சிரமங்களைப் பற்றி கலந்துபேசியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

அந்தக் கூட்டத்தின் ஒலிப்பதிவை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திங்கட்கிழமை இரவு வெளியிட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திருமதி லாம், அந்தச் செயல் "ஏற்கத்தகாதது," என்று கண்டித்தார்.

ஆர்ப்பாட்டங்களிலிருந்து ஹாங்காங் மீண்டு வருவதைப் பார்ப்பதில் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இத்தகைய சூழ்நிலைகளில் வெளியேறுவதே எவருக்கும் 'எளிய தெரிவாக' இருக்கும் என்பதை எடுத்துச்சொல்ல முயற்சி செய்ததாகச் சொன்னார்.

"நான் இதுவரை மத்திய மக்கள் அரசாங்கத்திடம் பதவிவிலகல் கடிதத்தைக் கொடுக்கவில்லை. பதவி விலகாதிருப்பது எனது சொந்த முடிவு," என்று செய்தியாளர்களிடம் திருமதி லாம் கூறினார்.

சென்ற வாரம் தொழில் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய திருமதி லாம், தான் "மன்னிக்கமுடியாத பேரழிவை" ஏற்படுத்தி இருப்பதாகவும், தனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் பதவி விலகியிருக்கக்கூடும் என்றும் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திங்கட்கிழமை இரவு செய்தி வெளியிட்டது.