பிரிட்டிஷ் பிரதமர் எச்சரிக்கை: ஒப்பந்தமற்ற வெளியேற்றம் தடுக்கப்பட்டால் தேர்தல்

பிரிட்டிஷ் பிரதமர் எச்சரிக்கை: ஒப்பந்தமற்ற வெளியேற்றம் தடுக்கப்பட்டால் தேர்தல்

1 mins read
76d3e3f0-0a41-43db-82d4-05f697131be8
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் சாத்தியமற்றுப் போய்விடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். படம்: ஏஎஃப்பி -

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருந்தால் தேர்தல் நடத்தப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளிப்படையாக எச்சரித்தார்.

"எந்தச் சூழ்நிலையிலும் புருஸ்ஸல்ஸிடம் தாமதப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்ளப் போவதில்லை என்பதை அனைவரிடமும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுகிறோம், எந்தக் கேள்விக்கும் இடமில்லை," என்று தமது அலுவலகத்திற்கு வெளியில் அவசரமாக வெளியிட்ட அறிக்கையில் திரு ஜான்சன் குறிப்பிட்டார்.

"நமது வாக்குறுதிகளை மீறும் எந்த முயற்சியையும் நாங்கள் ஏற்கமாட்டோம். எனக்குத் தேர்தல் வேண்டாம். உங்களுக்கும் தேர்தல் வேண்டாம். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படுவோம்," என்றும் அவர் கூறினார்.

ஒப்பந்தமற்ற வெளியேற்றம் பெரும் பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தும் என அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வெளியேற்றத்தை ஆதரிப்பவர்கள், பிரிட்டன் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என விரும்புகின்றனர். சீனாவையும் அமெரிக்காவையும்விட ஐரோப்பா பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு இந்தக் கூட்டணியே காரணம் என அவர்கள் கருதுகின்றனர்.

ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் சாத்தியமற்றுப் போய்விடும் என்று திரு ஜான்சன் கூறினார்.

அரசாங்கத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றம் முறியடித்தால், தேர்தல் நடத்துவதன் தொடர்பில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அக்டோபர் 14ஆம் தேதி தேர்தல் நடத்தப்படலாம் என அரசாங்கத் தரப்பிலிருந்து தெரியவருகிறது.