ஜார்ஜ்டவுன்: கனமழை காரணமாக மலேசியாவின் பினாங்குத் தீவில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள பல சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளம் காரணமாக பினாங்கில் விமானச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
பயான் பாரு, பயான் லெபாஸ் ஆகிய நகரங்களிலும் ஜாலான் மசுரி, ஜாலான் மாயாங் பாசிர், லெபு மாயாங் பாசிர், ஜாலான் கம்போங் ரெலாவ் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளிலும் வெள்ளம் புகுந்தது.
இருப்பினும், பிற்பகல் 1 மணி அளவில் வெள்ளம் வடிந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை 10.30 மணியிலிருந்து ஏறத்தாழ 11 மணி வரை பினாங்கு விமான நிலையத்தில் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலையத்தின் மூத்த நிர்வாகி திரு முகம்மது நட்சிம் ஹஷிம் தெரிவித்தார்.
கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாகவும் சாக்கடை அடைப்பால் அல்ல என்றும் பினாங்கு சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

