ஜோகூர்: இரண்டு வாரங்களுக்கு ஜோகூர் மாநிலத்தில் மழை பெய்யாத நிலையில் அங்குள்ள மாச்சாப் அணையின் நீர்மட்டம் மோசமான அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் ஜோகூர்பாரு மாநிலத்தைச் சேர்ந்த 150,000 பேர் பாதிப்புக்கு உள்ளாவர்.
தண்ணீர் சுத்திகரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகித்தல் ஆகியவற்றின் தொடர்பில் நீர் நிர்வாகம் செய்து வரும் எஸ்ஏஜி ரேன்ஹில் நிறுவனம், அதன் நீர் விநியோக முறையைப் படிப்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று தேசிய நீர் சேவை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிம்பாங் ரெங்கம், லாயாங்-லாயாங், பொந்தியனின் வடபகுதிகளில் உள்ள 29,910 வாடிக்கையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 149,550 பேர் ஒரு மாத காலத்திற்கு நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படுவர்.
திங்கட்கிழமை முதல் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரையில் இவர்களுக்கு 36 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும்.
பின்னர் அடுத்த 36 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும். மாச்சாப் அணையைத் தவிர ஜோகூரிலுள்ள லெபாம், அப்பர் லாயாங், புலாய் அணைகளில் உள்ள நீரும் கணிசமான அளவுக்குக் குறைந்துள்ளது என்று ஆணையம் சுட்டியது. ஆனால் இம்மூன்று அணைகளுக்கும் வேறு இரு அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

