'ஸ்டெனா இம்பெரோ' கப்பல் - ஏழு பணியாளர்கள் விடுதலை

'ஸ்டெனா இம்பெரோ' கப்பல் - ஏழு பணியாளர்கள் விடுதலை

1 mins read
1e6e3cfd-9c1b-4a4c-b656-f67742c02123
-

சுவீடனுக்குச் சொந்தமான 'ஸ்டெனா இம்பெரோ' எண்ணெய்க் கப்பலைச் சேர்ந்த 23 பணியாளர்களில் எழுவரை ஈரான் விடுதலை செய்திருக்கிறது. அந்தக் கப்பல் கடற்துறை சட்டங்களுக்குப் புறம்பாக நடந்துகொண்டதாகக் கூறிய ஈரான், ஜூலை மாதம் 19ஆம் தேதியன்று அதனைக் கைப்பற்றியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் தடைகளை மீறும் விதமாக ஈரானின் 'கிரேஸ்-1' கப்பல் சிரியாவுக்கு எரிபொருட்களைக் கொண்டு செல்வதாகச் சந்தேகங்கள் எழுந்தன. அந்தச் சந்தேகத்தின் பேரில் அந்தக் கப்பல், பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள ஜிப்ரால்டர் பிரதேசத்திற்கு அருகே நிறுத்தப்பட்டது. ஜிப்ரால்டர் அதிகாரிகள் அந்தக் கப்பலைக் கைப்பற்றி அதற்குள் இருந்த பணியாளர்களைத் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

கப்பலைச் சேர்ந்த ஏழு பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கப்பலைப் பாதுகாப்பாகச் செலுத்த எஞ்சியுள்ளோர் அதற்குள்ளேயே இருப்பர் என்றும் 'ஸ்டெனா இம்பெரோ'வின் தலைவர் எரிக் ஹனெல் தெரிவித்தார்.

இந்த ஏழு பணியாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.