ஜப்பானில் மோதிய ரயில், லாரி; 30 பேர் காயம்

ஜப்பானில் மோதிய ரயில், லாரி; 30 பேர் காயம்

1 mins read
36755fbc-414e-4123-b6fe-39553b6858f1
-

ஜப்பானின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான யோக்கோஹாமாவில் விரைவுச்சேவை ரயிலும் லாரியும் ஒன்றோடு ஒன்று மோதியதில் கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். தோக்கியோவுக்குச் செல்லும் ரயில் தடத்தில் ஏற்பட்ட இந்த மோதலில் ரயிலின் முதல் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.

"லாரி ஓட்டுநர் கடுமையாகக் காயமடைந்தார். ஆயினும், ரயில் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்படவில்லை," என்று பாதிக்கப்பட்ட ரயிலின் பயணி என்ஹெச்கே ஊடக நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தடம்புரண்ட ரயில் பெட்டியிலிருந்து கரும்புகை வெளிவருவதைச் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்களிலும் காணொளிகளிலும் காண முடிகிறது. சேதப்பட்ட மின்சாரக் கம்பம், மக்கள் பதற்றத்துடன் ரயிலிருந்து வெளியேறுவது, உடைந்த கண்ணாடிச் சன்னல்கள் ஆகியவையும் காணப்பட்டன.

சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்வதாகக் கூறும் அந்நாட்டின் போக்குவரத்து அதிகாரிகளும் போலிசாரும் தற்போது எதையும் உறுதியாகக் கூற முடியவில்லை எனத் தெரிவித்தனர்.