ஃபேஸ்புக் பயனாளர்கள் 400 மில்லியனுக்கு மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் வெளியானதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கர்கள் 133 மில்லியன் பேர், வியட்னாமியர்கள் 50 மில்லியனுக்கு மேற்பட்டோர், பிரிட்டிஷ்காரர்கள் 18 மில்லியன் பேர் உட்பட 419 மில்லியன் பேரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேவையகத்தில் இருந்து அவை கசிந்ததாக 'டெக்கிரட்ச்' எனும் தொழில்நுட்பச் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஃபேஸ்புக் பயனாளருக்கும் உரிய பிரத்தியேகமான அடையாள எண்கள், அவர்களின் தொலைபேசி எண்கள், பாலினம், வசிப்பிடம் போன்ற தகவல்கள் கசிந்தன என்று அந்தச் செய்தி கூறியுள்ளது. அந்தச் சேவையகத்திற்கு மறைச்சொல் பாதுகாப்பு வசதி இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தரவுத்தளங்களைப் பார்க்க முடியும் எனச் சொல்லப்பட்டது. அந்தத் தகவல்களை நேற்று முன்தினம் வரை இணையத்தில் காண முடிந்ததாக 'டெக்கிரட்ச்' செய்தி குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்தத் தகவல் கசிவு செய்தி உண்மைதான் என ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், 'டெக்கிரட்ச்' செய்தி குறிப்பிட்டதுபோல, 419 மில்லியன் பேரின் கணக்குகள் பற்றிய விவரங்கள் கசியவில்லை என்றும் அதில் கிட்டத்தட்ட பாதிப் பேரின் கணக்குகள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தது. அவற்றுள் பல பதிவுகள் உண்மையானதல்ல, நகல்களே என்றும் அந்தத் தரவுகள் அனைத்தும் பழையவை என்றும் அந்நிறுவனம் கூறியது. "அந்தத் தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. அந்த ஃபேஸ்புக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை," என்று ஃபேஸ்புக் பேச்சாளர் ஒருவர் கூறியதாக 'ஏஎஃப்பி' செய்தி தெரிவித்தது. கடந்த ஆண்டில் 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்ற நிறுவனம் உரிய அனுமதியின்றி மில்லியன்கணக்கான ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தொலைபேசி எண்களைக் கொண்டு தேடும் வசதியை ஃபேஸ்புக் நீக்கியது.
பயனாளர்கள் தொலைபேசி எண்கள் வெளியாகும் பட்சத்தில் அவர்களுக்குப் போலி அழைப்புகள் வரலாம். அத்துடன், சம்பந்தப்பட்டவரின் கணக்குகளுக்கான மறைச்சொற்களை இணைய ஊடுருவிகள் மாற்றும் அபாயமும் உள்ளது.

