அதிகாலை வேளையில் கூவும் உரிமைக்காக நீதிமன்றம் சென்ற மவுரிஸ் என்ற சேவல் இறுதியில் வெற்றிக் கனியைக் கொத்தித் தின்றது. சேவலின் கூவலால் எரிச்சல் அடைந்த அதன் உரிமையாளர் கொரின்னா ஃபிசோவின் அண்டை வீட்டுக்காரர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, உலக கவனத்தை ஈர்த்தது.
"மவுரிஸ் இந்த வழக்கில் ஜெயித்துள்ளது. வழக்கைத் தொடுத்தவர்கள் இந்தச் சேவலின் உரிமையாளருக்கு 1,000 யூரோ (1,500 வெள்ளி) வழங்கவேண்டும்," என்று கொரின்னாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
விடுமுறைக் காலத்தைக் கழிப்பதற்காக மவுரிஸ் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டை ஓய்வுபெற்ற தம்பதியர் இருவர் வாங்கி அதில் தங்கினர். மவுரிசின் கூவலால் தொல்லையடைந்த அந்தத் தம்பதியினர் இது குறித்து திருவாட்டி ஃபிசோவிடம் புகார் செய்தார். திருவாட்டி ஃபிசோ எவ்வளவோ முயன்றும் மவுரிஸ் காலை நேரத்தில் கூவுவதை நிறுத்த முடியாமல் போனதால் இந்த வழக்கு தொடரப்பட்டது.
கிராமப்புற மக்களுக்கும் விடுமுறை வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே நிலவும் மோதல்களை இந்த வழக்கு பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

