கேரி லாம்: மசோதா மீட்பு கொந்தளிப்பு நிலைமையை சரிசெய்யும் முயற்சி

கேரி லாம்: மசோதா மீட்பு கொந்தளிப்பு நிலைமையை சரிசெய்யும் முயற்சி

2 mins read

ஹாங்காங்: ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் மசோதாவை நிரந்தரமாக மீட்டுக் கொண்டது நாட்டில் நிலவும் கொந்தளிப்பு நிலை யைச் சரிசெய்வதில் எடுக்கப்பட்டுள்ள முதல்படி என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி திருவாட்டி கேரி லாம் கூறியுள்ளார்.

அந்த மசோதா மீட்டுக்கொள்ளப்பட்டது தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் ஒரு பகுதிதான் என்று போராட்டக்காரர்கள் கூறிய நிலையில் அதை சமாளிக்கும் விதமாக திருவாட்டி லாம் மேற்கண்டவாறு கூறினார். சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த கேரி லாம், இதுவும் தமது மற்ற நடவடிக்கைகளும் சமுதாயத்தில் நிலவும் முட்டுக்கட்டையை போக்கும் முதல் படி என்று அதை வர்ணித்தார்.

ஹாங்காங்வாசிகளை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் அந்த மசோதா தொடர்பில் நாடு முழுவதும் மூன்று மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் போலிசாருடன் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கியமான கோரிக்கையே அந்த மசோதா மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே. இதில் தமது மனதை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுவதை திருவாட்டி லாம் மறுத்தார். அந்த மசோதா மீட்டுக்கொள்ளப்பட்டது பெய்ஜிங்கின் ஆதரவுடன் தான் எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கினார். ஹாங்காங்கில் மீட்டுக்கொள்ளப்பட்ட மசோதாவுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கான அடிப்படைக் காரணங்களை ஆராயவும் அவர் உறுதி கூறினார். ஆனால், ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் திருவாட்டி லாமின் இந்த முடிவு காலங்கடந்து வந்த சிறிய அளவிலான சலுகை எனக் கூறி இதை நிராகரித்துள்ளனர். அவர்கள், போராட்டங்களை சமாளிக்க போலிசார் மேற்கொண்ட பலப்பிரயோகம் குறித்து விசாரிக்க சுயேச்சையான விசாரணைக்கு ஏற்பாடு ெசய்வது, ஹாங்காங்கைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆள்வது போன்ற முக்கியமான வேறு பல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில், திருவாட்டி லாமின் பேச்சில் திருப்தியடையாத ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.