'பிரெக்சிட்டைத் தடுப்பது துரோகச் செயலாகும்'

'பிரெக்சிட்டைத் தடுப்பது துரோகச் செயலாகும்'

2 mins read

லண்டன்: எவ்வித உடன்படிக்கையும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு முட்டுக்கட்டை போட நாடாளுமன்ற மேல்சபையில் எடுக்கப்பட்ட முயற்சி களைப் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கம் கைவிட்டுள்ளது.

இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு காண முடியாத பட்சத்தில் அதிலிருந்து வெயேற மூன்று மாத நீட்டிப்பைக் கோர வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்பட்டுள்ளது.

நீட்டிப்பை விரும்பாத திரு ஜான்சன், தேவை ஏற்பட்டால் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தாமதப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சட்டத் திருத்தங்களை முன்வைத்தனர். ஆனால் அந்தச் சட்டத்தைத் தடுக்கும் முயற்சிகளைக் கைவிடுவதாக ஆளும் கட்சி நேற்று காலை அறிவித்தது.

"ஆளும் கட்சியினர் எடுக்கும் முயற்சிகள் முட்டாள்தனமானது என்று அவர்களுக்கே தெரிய வந்துள்ளது. முன்னோக்கிச் செல்ல இன்னொரு வழியைத் தேட வேண்டும் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர்," என்று பிரிட்டிஷ் மேலவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரிச்சர்ட் நியூபி கூறினார்.

இந்நிலையில், தேர்தலுக்காக தாம் அடிபோட இருப்பதாக தெரிவித்த பிரதமர் ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறுப்பியத்தை நீட்டிப்பது பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று நேற்று கூறினார்.

தேர்தலைத் தடுக்கும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினைப் பிரதமர் ஜான்சன் கடுமையாகச் சாடினார். திரு கோர்பினின் செயல் ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடுப்பது பிரிட்டனின் வரலாற்றிலேயே நடைபெற்ற மாபெரும் ஜனநாயக வாக்களிப்பை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெக்சிட் வாக்களிப்பை பிரதமர் ஜான்சன் குறிப்பிட்டார். பிரெக்சிட் தொடர்பாக பிரிட்டிஷ் மக்கள் எடுத்த முடிவை தாம் இழிவுபடுத்தப் போவதில்லை என்றும் தேர்தலை நடத்தி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த பிரிட்டிஷ் மக்களுக்கு வாய்ப்பளிக்கப் போவதாகவும் திரு ஜான்சன் தெரிவித்தார்.